சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2018 03:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அதனையொட்டி, நாளை அதிகாலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருள, 8:00 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 18ம் தேதி தெருவடைச்சானும்; 22ம் தேதி நடராஜர் மார்கழி ஆருத்ரா திருத்தேரோட்டமும் நடக்கிறது. மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனையும், மறுநாள் 13ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும்; ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அதனைத்தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மதியம் 2:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர் செயலாளர் நடேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்கின்றனர்.