பதிவு செய்த நாள்
17
டிச
2018
02:12
மாமல்லபுரம்: மாமல்லபுரம், சுற்றுப் புற சைவ, வைணவ கோவில்களில், மார்கழி வழிபாடு நடந்தது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று (டிசம்., 16ல்) காலை, வழக்கமான வழிபாடு நடந்து, மார்கழி மாதம் துவங்கிய பிற்பகல், திருப்பள்ளி எழுச்சி சேவை; அதைத்தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு திருப்பாவை சாற்றுமறை நடந்தது.
இவ்வூர், மல்லிகேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு, திருவெம்பாவை சாற்றுமறை சேவையாற்றினர். நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பக்த பஜனை குழுவினர், மேளம், மிருதங்கம் இசைத்து, வீதிகளில், திருப்பாவை பாடி, உலா சென்று, கோவில் சுவாமிக்கு சாற்றுமறை சேவையாற்றினர்.திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவிலில், மூலவர் ஆதிவராக பெருமாளிற்கு, திருப்பாவை சேவையாற்றினர்.கல்பாக்கம், ஏகாம்பரேஸ்வரர்; சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர்; கூவத்தூர், திருவாலீஸ்வரர் ஆகிய கோவில்களில், திருவெம்பாவை சாற்றுமறை, சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள்; கூவத்தூர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்களில், திருப்பாவை சேவையாற்றினர்.