பதிவு செய்த நாள்
20
டிச
2018
12:12
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே பன்னிமடை அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின், 6ம் பாடலை பக்தர்கள் பாடி, சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.இறைவனிடம் நீண்ட காலம் வேண்டி பெற்ற ஒரு குழந்தை, 500 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் பரவிய அம்மை நோயால் பாதிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில், பெற்றோர் குழந்தையை பன்னிமடை உலகளந்த பெருமாள் கோவில் முன் போட்டு சென்றுள்ளனர்.மனம் பொறுக்காமல் காலை வந்து பார்த்தபோது, குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. அம்மை நோயின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின், படிப்படியாக குணமானது.
இப்படி, குழந்தை வரம் இல்லாதவர்கள், குழந்தை உடல் நிலை சரியில்லாதவர்களின் குறைகளை போக்கும் கோவில் என்ற பெயர் பெற்றுள்ளது.மார்கழியையொட்டி இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின், புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்... என தொடங்கும், பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். பாடலின் பொருள்அன்புத் தோழியே... நீ உடனே எழுந்திரு. பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா. வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா. பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல நடித்து, அவளது உயிரை பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின், உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி, ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை...? உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக என்பதே இப்பாடலின் பொருள்.