பதிவு செய்த நாள்
21
டிச
2018
12:12
ஆத்தூர்: வசிஷ்ட நதியில் மணல் கடத்தலின்போது, 51 ஆண்டுகளுக்கு முன், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட செல்லியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் வழியாக செல்லும் வசிஷ்ட நதியில், நேற்று முன்தினம் (டிசம்., 19ல்) இரவு, 10:00 மணிக்கு, சிலர், டிராக்டரில், மணல் கடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் நடுவில் மணல் அள்ளியபோது, 2.5 அடி உயரத்தில், அம்மன் சிலை தெரிந்தது. உடனே, கடத்தல் கும்பல், ஓடிவிட்டது. இதையறிந்த மக்கள், நேற்று (டிசம்., 20ல்) காலை, ஆற்றில் கண்டெடுத்த சிலையை பார்த்தனர். அது, 1967ல், வசிஷ்ட நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, ஆற்றின் தென்கரையிலிருந்த கோவில் இடிந்து, மூலவர் செல்லியம்மன் சிலை அடித்துச்சென்றது. அது, பல ஆண்டுகளாக தேடப்பட்ட சிலை என, தெரியவந்தது.
அதை எடுத்து, ஊர் மையப்பகுதியில் வைத்தனர். பெண்கள் பலர், சிலைக்கு மாலை அணி வித்து, அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மக்கள் கூறுகையில், கடந்த, 1967ல், வசிஷ்ட நதி வெள்ளப்பெருக்கில், எங்கள் ஊரைச் சேர்ந்த இருவர் உள்பட, 15 பேர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, இச்சிலையும் வெள்ளத்தில் சென்றது. 51 ஆண்டு களுக்கு பின், மீண்டும், ஆற்றில் சிலை கிடைத்துள்ளதால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.