மதுரை; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், ‘அது நில அளவைக்கல்’ என தி.மு.க., எம்.பி.,யும், சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி கூறினார். இதே கருத்தை தமிழக அரசும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது நீதிபதிகளிடம் தெரிவித்தது.
அப்போது, ‘நில அளவை கல்’ என்ற ஆதாரமற்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆகம நிபுணரும், வழக்கறிஞருமான சங்கரனின் பிரத்யேக பேட்டியுடன் தினமலர் நாளிதழ், டிச.,9ல் ஒரு செய்தி வெளியிட்டது. அதில் தீபத்துாண் குறித்து தமிழக தொல்லியல் துறை 1981ல் வெளியிட்ட நுாலில் குன்றத்து கோயில் என குறிப்பிடப்பட்ட பகுதியில் சொல்லப்பட்டிருந்ததை தினமலர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியது. இதன்மூலம் தி.மு.க.,வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியது போல் அது நிலஅளவைக்கல் அல்ல, தீபத்துாண்தான் என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது ஹிந்து அமைப்பினர் இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இதன்பிறகும் நில அளவைக்கல்தான் என்பதில் தமிழக அரசு உறுதியாக நின்றது. இதனால் தினமலர் நாளிதழ் அதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அப்போது உயர்நீதிமன்ற மதுரை வழக்கறிஞர் தங்கபாண்டியன், நிலஅளவைக்கல் எப்படி இருக்கும் என ஆய்வு செய்தது குறித்து டிச., 10ல் ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான். அரசு பதிவேடுகளில் நில அளவைக்கல் குறித்த தகவல் இல்லை’ என தலைப்பிட்டு தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில் நிலஅளவைக்கல் எப்படி இருக்கும்; தீபத்துாண் எப்படி இருக்கும்-, வேறுபாடு என்ன என்று விரிவாக சுட்டிக் காட்டப்பட்டது. இதன்பிறகு அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு ‘அது நிலஅளவைக்கல் அல்ல’ என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்படி தீபத்துாணை, ‘தீபத்துாண் தான்’ என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது தினமலர். தற்போது உயர்நீதிமன்றமும் அதில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு பக்தர்களின் மனதில் பால்வார்த்துள்ளது.