ஆமதாபாத் : அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் 30 ஆண்டுகள் பழமையான சர்ச் ஒன்று, விரைவில் சுவாமி நாராயண் கோயிலாக மாற்றப்பட உள்ளது. வர்ஜினியா மாகாணம் போர்ஸ்மவுத் பகுதியில் 30 ஆண்டு கால பழமையான சர்ச் தான் தற்போது கோயிலாக மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்த பிறகு, தெய்வ சிலைகள் பிரதிஷ்டை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6வது சர்ச்: அமெரிக்காவில் இந்து கோயிலாக மாற்றப்படும் 6 வது சர்ச் இதுவாகவும். உலக அளவில் சுவாமிநாராயன் கோயிலாக மாற்றப்படும் 9வது சர்ச் இது என ஆமதாபாத்தின் மணிநகர் பகுதியில் செயல்பட்டு வரும் சுவாமிநாராயண் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விர்ஜினியா மட்டுமின்றி கலிபோர்னியா, பென்சைல்வேனியா, லாஸ் ஏஞ்சல்ஸ், ஒஹியோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்களும் இந்து கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதே போன்று ஐரோப்பால் லண்டன் மற்றும் மான்செஸ்டர் பகுதிகளில் உள்ள 2 சர்ச்களும் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. விர்ஜினியாவில் 50,000 குஜராத்தி மக்களும், வடஇந்தியாவை சேர்ந்தவர்களும் வசித்து வருவதால் இந்த சர்ச்-ஐ, கோயிலாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போர்ட்ஸ்மவுத் பகுதியில் உள்ள சர்ச்சில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்ய போவதில்லை என சுவாமிநாராயண் ஆலய நிர்வாகி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஏற்கனவே மற்றொரு மதத்தின் நம்பிக்கைக்குரிய ஆன்மிக தலமாக இந்த சர்ச் இருந்து வந்ததால் பெரிய அளவில் மாற்றம் செய்ய அவசியமில்லை. விர்ஜினியாவில் ஹரிபக்தர்களுக்காக அமைக்கப்படும் முதல் கோயில் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சர்ச் 1.6 மில்லியன் டாலர் செலவில் 5 ஏக்கரில் 18,000 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. 150 கார்கள் வரை பார்க் செய்யும் வசதி கொண்டதாகும்.