பதிவு செய்த நாள்
24
டிச
2018
03:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நேற்று (டிசம்., 23ல்) நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மாலை சிவகாமி அம்மன் திருஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம், காலை, 8:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், நடராஜர், சிவகாமி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிவகாமி அம்மையுடன், நடராஜப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில், பட்டி விநாயகரை, சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது; பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டார ஆயிர வைசியர் சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இன்று (டிசம்., 24ல்) மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரினசத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.நெகமம் நித்தீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி புறப்பாடு, ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. தேவனாம் பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அம்மணீஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.