பதிவு செய்த நாள்
25
டிச
2018
11:12
மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில் உள்ள, கோதண்டராம சுவாமி கோவிலில், மார்கழி மாத உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. மடிப்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது, கோதண்டராம சுவாமி கோவில். இக்கோவிலில், கோதண்டராமர் மூலவராகவும், உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், ஹயக்கிரீவர், ஸ்ரீனிவாசர், பத்மாவதி தாயார், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு, தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாத உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மார்கழி உற்சவத்தை முன்னிட்டு, தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, பக்தர்களால் திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுகின்றன.
மாதம் முழுவதும், ஒரகடம் லட்சுமி நரசிம்மாச்சாரியாரின், வேத திவ்ய பிரபந்த ஆகம உபன்யாசம் நடத்தப்படுகிறது. தனுர் மாத பூஜையாக, 16ம் தேதி முதல், ஜன., 15ம் தேதி வரை, வெண்பொங்கல் தளிகையும்; நாயகனாய், மாரிமலை, கூடாரை நாட்களில், சர்க்கரை பொங்கலும் படைக்கப்படுகிறது. வரும், 27ம் தேதி, நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்ச்சி, மாலை, 5:30 மணி நடைபெறும். ஜன., 5ம் தேதி, அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, வடமாலை சாற்றுதல், திருமஞ்சனம், வெண்ணெய் காப்பு சாற்றுதல் நடக்கிறது. ஜன., 14ம் தேதி, ஆண்டாள் போகி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சக்கரத்தாழ்வார், கோதண்டராம சுவாமிக்கு, மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.