பதிவு செய்த நாள்
20
பிப்
2012
04:02
மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய முயன்றால் நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.
ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும், அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுத்துவதில்லை.
நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பயிற்சி மனதிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.
முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி, குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மை பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழி ஏற்படும்.
இறைவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதிய பலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும், என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.
தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும் புதுபலத்தையும் அளிக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நம்மைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தவறான எண்ணங்களை, நீ கவனத்துடன் தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களை மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருந்தாலே, தவறான எண்ணங்கள் எழாது.
எண்ணத்தின் வேகத்தையும், இயல்பையும் அறிந்து கொண்டவர்களுக்கு அதுவே இன்பமயமாகும்.
தூங்கும் போது மட்டுமே தலையணை தேவை. அதனை எந்நேரமும் தலையில் கட்டிக் கொண்டிருப்பதில்லை, அதுபோல தேவைப்படும் போது, தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேல் எழும் ஆசையை ஏற்று நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகத்தில் மனம் சென்று கொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித்தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும்.
வெற்றி வேண்டுவோர், தாங்கள் எதிர்கொள்ள விருக்கும் பிரச்னைகளைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.
ஆசையை அடியோடு ஒழிப்பது எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
தவறான சிந்தனைகளை ஒரு போதும் நமக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். வேதாத்ரி மகரிஷி