பதிவு செய்த நாள்
25
டிச
2018
02:12
மோகனூர்: மோகனூர் சுப்ரமணியபுரம் குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா, நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) அதிகாலை, கிராம சாந்தி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மதியம், காவிரி ஆற்றில் இருந்து சுவாமி வேல் எடுத்து வந்து பூஜைகள் நடந்தன.
நேற்று (டிசம்., 24ல்) காலை, 9:00 மணிக்கு, ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். அக்ரஹாரம், காளியம்மன் கோவில் தெரு, தோட்டக்காரத்தெரு, பஸ் ஸ்டாண்ட் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பக்தர்களுடன், யானை, குதிரை, பசுக்கள் பங்கேற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, பொங்கல் மாவிளக்கு பூஜை, கிடாவெட்டு நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, திருநங்கைகளின் நடன நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா. நாளை (டிச., 26), மதியம், 1:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.