பதிவு செய்த நாள்
27
டிச
2018
01:12
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இ- உண்டியல் திட்டத்துக்கான இயந்திரங்களை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை மாசாணியம் மன் கோவில், முக்கிய ஆன்மிக தலமாக உள்ளது. அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங் களில் பல்வேறு பகுதியிலிருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலிலுள்ள, ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் மற்றும், 22 நிரந்தர உண்டியல்கள் மூலம் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், அதிக காணிக்கை வசூல் செய்யும் கோவில்களின் பட்டியலில் மாசாணியம்மன் கோவிலும் ஒன்றாக உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில்லரை தட்டுப்பாட்டால் சிரமப்படாமல் இருக்கவும், பெரிய அளவிலான தொகையை கையில் எடுத்து வருவதை தடுக்கவும், பழநி உட்பட அதிக காணிக்கை வசூலிக்கும் கோவில்களில், இ-உண்டியல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த, இ - உண்டியல் இயந்திரத்திலுள்ள கார்டு ஸ்வைப்பிங் பகுதியில், பக்தர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கள், காணிக்கையை எளிதாக செலுத்தலாம். இதேபோல், மாசாணியம்மன் கோவிலிலும், இ - உண்டியல் அமைப்பை ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் கடந்த, மார்ச் மாதம் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இன்று வரை நடவடிக்கை இல்லை.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கோவிலுக்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியிடம், இ-உண்டியல் அமைக்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு கோரிக்கை சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கி மூலம், அதற்கான இயந்திரம் விரைவில் வழங்கப்பட்டதும், பக்தர்களுக்காக சேவை துவங்கப்படும், என்றனர்.