பதிவு செய்த நாள்
27
டிச
2018
02:12
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் நடந்த, ஜெகன்நாதர் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், தேன்கனிக் கோட்டையில், நேற்று முன்தினம் (டிசம்., 25ல்) இரவு ஜெகன்நாதர் தேரோட்டம் நடந்தது.
ஜெகன்நாதர், பல்தேவ், சுபத்திரா தேவி ஆகிய சுவாமி சிலைகள், மலர்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் ஊர்வலமாக சென்றன. தேன்கனிக்கோட்டையில் உள்ள, சீனிவாசா மகாலில் துவங்கிய ஊர்வலம், ராஜாஜி சாலை, பஸ் ஸ்டாண்ட், கோட்டை வாசல், பைபாஸ் சாலை, காந்தி சிலை வழியாக சென்று, மீண்டும் மகாலில் முடிவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட இஸ்கான் அமைப்பாளர் ஸ்ரீனிவாசா ஷியாம் தாஸ், ஜெகன்நாதரின் ஹரிராம சங்கீர்த்தனம் பாடினார். அதற்கு ஏற்றவாறு பக்தர்கள் ஆடி, பாடினர். தேன்கனிக்கோட்டை இஸ்கான் அமைப்பின் மேலாளர் முரளி ராம்தாஸ் செய்திருந்தார்.