பதிவு செய்த நாள்
30
டிச
2018
12:12
மேட்டூர்: சுவாமி ஐயப்பனை தரிசிக்க, கொளத்தூர் பக்தர்கள், 550 கி.மீ., தூரம் பாதயாத்திரையாக புறப்பட்டனர். கொளத்தூர், கோவிந்தப்பாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், குருசாமி குமார் தலைமையில், 22 ஆண்டுகளாக, ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். கடந்த, 27ல், கோவிந்தப்பாடியில், பாதயாத்திரையை தொடங்கிய குழுவைச் சேர்ந்த பக்தர் தங்கவேலு கூறியதாவது: குருசாமி குமார், பக்தர்களை, ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக அழைத்துச்செல்கிறார். 16 பேர் அடங்கிய குழுவினர் செல்கிறோம். கோவிந்தப்பாடியிலிருந்து, ஐயப்பன் கோவில் வரை, 550 கி.மீ., தூரம், 15 நாட்களில் நடந்து செல்வோம். தினமும் காலை, 3:00 மணிக்கு எழுந்து, 9:00 மணி வரை, 20 கி.மீ., தூரம் நடப்போம். மீண்டும், பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு, மாலை, 4:00 முதல், இரவு, 9:00 மணி, 25 கி.மீ., தூரம் நடந்த பின் ஓய்வெடுப்போம். இவ்வாறு, அந்தியூர், பவானி, தாராபுரம், பழநி, செம்பட்டி, தேனி, குமுளி வழியாக, ஜன., 12ல் கோவிலை அடைவோம். அங்கு, இரு நாட்கள் ஓய்வெடுத்து, 15ல் ஐயப்பனை வணங்கி, மகரஜோதியை தரிசித்து, வேனில் ஊர் திரும்புவோம். பாதயாத்திரையாக சென்று, ஐயப்பனை தரிசனம் செய்வதால், நினைத்த காரியம் நிறைவேறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.