பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
பழநி: தைப்பூச விழாவை முனிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஆபத்தான முறையில் நடுரோட்டில் நடந்து வருவதால் விபத்து அபாயம் உள்ளது. பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு மார்கழியில் மாலை அணியும் முருகபக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வரத் துவங்கியுள்ளனர். சென்னை, மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், திருச்சி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சாரை, சாரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
ஒட்டன்சத்திரம் -- பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை,ரோடு உள்ளது. இது பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ரோட்டோரத்தில் தள்ளுவண்டி, பழக்கடை ஆக்கிரமிப்புகளால் பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டோரத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், சில பக்தர்கள் ஆபத்தான முறையில் நடுரோட்டில் நடந்து வருகின்றனர். அவ்வாறு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே செம்பட்டியில் மதுரையைச் சேர்ந்த பக்தர் விபத்தில் இறந்துவிட்டார். ஆகையால் தைப்பூச பக்தர்கள் உயிர் இழப்பை தடுக்க விழாநாட்கள் மட்டுமின்றி, தற்போதே போலீசார் அதிகாலை, இரவுநேரத்தில் பாதயாத்திரை பக்தர்களை ஒழுங்குப்படுத்த ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதற்கு மாவட்ட எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.