பதிவு செய்த நாள்
02
ஜன
2019
05:01
* உடுமலை:புத்தாண்டு தினமான நேற்று (ஜன.,1ல்), கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று, இரவு, 12:00 மணிக்கு, கேக் வெட்டியும், உறவினர்கள், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறியும் உற்சாகமாக கொண்டாடினர்.
கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மார்கழி மாத பூஜையுடன், புத்தாண்டு பூஜையும் இணைந்ததால், அதிகாலை முதலே, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
உடுமலை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மூலவர் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று (ஜன., 1ல்) அதிகாலை பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விபூதி அலங்காரத்தில் பிரசன்ன விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சவுரிராஜ பெருமாள் சன்னதியில், ஸ்ரீ தேவி, பூதேவி சமதே சவுரிராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமூர்த்திமலைபாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓருங்கே எழுந்தருளியுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று (ஜன.,1ல்), சிறப்பு பூஜைகள் நடந்தன.பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி, நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.அதே போல், சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஓசூர்: ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்ததால், மதிய நேரத்தில் நடை சாத்தப்படாமல், சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதேபோல், கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர் மலை மீதுள்ள பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபி ?ஷக, ஆராதனை நடந்தன. ஏரித்தெரு ஆஞ்நேயர், ராமர் கோவில், கோகுல் நகர் சாய்பாபா கோவில், பாகலூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாணீஸ்வரர் கோவில், மேட்டுத்தெருவில் உள்ள பெருமாள்கோவில், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில், கடத்தூர் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோவில், மொரப்பூரில் உள்ள சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ராஜ அலங்காரம் நடந்தது. அம்மனை சுற்றி, ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளை அலங்கரித்திருந்தனர். நேற்று (ஜன.,1ல்), பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாய கருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நேதாஜி சாலை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
* மோகனூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மோகனூர் உள்ள காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், அதிகாலை, முதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* மதுகரவேணி சமதே அசலதீபேஸ்வரர் கோவில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், நாவலடியான் கோவில், வள்ளியம்மன் கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் என, பல்வேறு கோவில்களில், காலை முதல், சிறப்பு ஆராதனை நடந்தது.
* சேலம்: ஆங்கில புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள, பல்வேறு கோவில்களில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம், தேர்வீதி, ராஜகணபதி கோவிலில், நேற்று (ஜன.,1ல்), காலை, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்ம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முத்தங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, ராஜகணபதியை வழிபட்டனர். அதேபோல், கோட்டை மாரியம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டது. கோட்டை அழகிரிநாதர் கோவிலில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜருக்கு, வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
குமாரசாமிபட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், பழைய அம்மனுக்கு தங்க கவசம், பெரிய அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர், மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணன் அலங்காரத்தில் வைரமுடி சேவையில் அருள்பாலித்தார்.
புத்தாண்டையொட்டி, சேலத்திலுள்ள அனைத்து கோவில்களில், சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து, சுவாமியை தரிசித்தனர். ஓமலூர் காசிவிஸ்வநாதர், தாரமங்கலம் கைலாசநாதர், ஆத்தூர் வெள்ளை விநாயகர், வடசென்னி மலை பாலசுப்ரமணியர், இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர், காளிப்பட்டி கந்தசாமி, அரியானூர், 1,008 சிவன் கோவிலில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* நாமக்கல்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
நாமக்கல்லில், வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. நேற்று (ஜன.,1ல்), ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு வடை மாலை அலங்காரம்; 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்; தொடர்ந்து, பல்வேறு மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய் யப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* நாமக்கல் அடுத்த வள்ளிபுரம், தொட்டிபட்டியில் சாய் தபோவனத்தில், காலை, 6:00 மணிக்கு பாபாவிற்கு மங்கள ஸ்நான ஆரத்தி; 7:45 மணிக்கு சர்வ சித்தி தன்ஹர்ஷன சங்கல்ப பூஜை; சாயி சத்சரிதம் பாராயணம், சாயி நாம ஜெபம், கூட்டுப்பிரார்த்தனை, ஆரத்தி மற்றும் அன்னதானம் நடந்தது.
* பள்ளிபாளையம் அடுத்த, ஒன்பதாம்படி பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.
* மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி முருகன் கோவிலில், அதிகாலை, 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில், முருகன் வள்ளி, தெய்வானை யுடன் அருள்பாலித்தார்.
* வையப்பமலை சுப்ரமணியம் கோவிலிலும், புடவைகாரியம்மன், வீரகாரன் கோவிலிலும் அபிஷேகங்கள் நடந்தன. அதேபோல், ப.வேலூர், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.