பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
ஓசூர்: சபரிமலை ஐயப்பன் கோவிலில், பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, தேன்கனிக் கோட்டை பகுதியில் நேற்று (ஜன., 4ல்) முழு அடைப்பு போராட்டம் நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், பிந்து, கனகதுர்கா என்ற, 50 வயதிற்கு உட்பட்ட இரு பெண்கள், போலீசார் உதவியுடன் தரிசனம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தும், கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், தேன்கனிக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், இந்து அமைப்புகள் சார்பில், நேற்று (ஜன., 4ல்) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவையாக கருதப்படும் மருந்து கடைகள், சில உணவகங்கள் தவிர, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை மட்டுமின்றி, தளி, கெலமங்கலம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.