பதிவு செய்த நாள்
06
ஜன
2019
01:01
மூணாறு:கேரளா, இடுக்கி மாவட்டம் புல்மேடு உள்ளிட்ட மூன்று இடங்களில் ஜன.14ல் ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதியை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு,பருந்து பாறை,பாஞ்சாலிமேடு பகுதிகளில் இருந்து மகரஜோதியை காணலாம்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து வண்டிபெரியாறு ஊராட்சி ஹாலில், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன், எஸ்.பி., வேணுகோபால் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகரஜோதி சீசன்போது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் 1,500 போலீசாரும், காட்டு யானை தடுப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடவுள்ளனர். காட்டுத் தீயை தடுக்க முன்னேற்பாடு, எக்கோ ஷாப் வசதிகள் செய்யப்படுகின்றன.புல்மேடு, பாஞ்சாலிமேடு பகுதிகளில் தடுப்புகள், ஆம்புலன்ஸ் சேவையுடன், பீர்மேடு தாலுகா மருத்துவமனை, குமுளி, வண்டி பெரியாறு ஆகிய சுகாதார நிலையங்களில் மருத்துவ வசதி செய்யப்படுகிறது. குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து கோழிக்கானம் முதல் புல்மேடு வரை ஒரு கி.மீ., துாரம் இடைவெளியில் 500 லிட்டர் வீதம் குடிநீர் தொட்டிகளை வைக்க உள்ளனர். கேரள அரசு போக்குவரத்து கழகம் 60 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
மோட்டார் வாகனத்துறையினர் குட்டிக்கானத்தை மையப்படுத்தி, முக்கயம், பாஞ்சாலிமேடு, வண்டிபெரியாறு, காக்கிகவல, பருந்துபாறை, குமுளி, பீர்மேடு ஆகிய மையங்களில் மீட்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஆகிய வசதிகள் செய்கின்றனர்.புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., சார்பில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டு, அதன் சேவை ஜன. 13 முதல் 15 வரை இருக்கும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.