மதுரை: மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் மார்கழி திருவிழாவையொட்டி அம்மனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் நடந்தது. சிவபெருமான் கட்டளைப்படி மணவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குலசேகர பாண்டிய மன்னரால் கடம்பவனக் காட்டை திருத்தி மதுரை அமைக்கப்பட்டது. அம்மன்னரால் வடக்கு திசையில் காளிதேவிக்கு கோயில் எழுப்பப்பட்டது. அக்காளிதேவி செல்லி எனவும், பின் செல்லத்தம்மன் எனவும் அழைக்கப்பட்டார். இக்கோயிலில் மார்கழி விழா டிச.,29 துவங்கியது.அம்மனுக்கு நேற்று காலை 9:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. கீழ மாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக மலர்சப்பரத்தில் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இன்று காலை 10:05 மணிக்கு மேல் காலை 10:29 மணிக்குள் சட்டத்தேர் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்தனர்.