பதிவு செய்த நாள்
07
ஜன
2019
11:01
திருவனந்தபுரம் : கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், சமீபத்தில் இரு பெண்கள் சென்று தரிசனம் செய்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடப்பதால் பதற்றம் காணப்படுகிறது. இதையடுத்து, கேரளாவுக்கு சுற்றுலாசெல்வதை தவிர்க்கும்படி, தங்கள் நாட்டு மக்களுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன; இது, கேரள சுற்றுலா துறைக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பெண்கள், சிறு சிறு குழுவாக, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். அவர்களுக்கு, கேரளாவில் உள்ள ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இதனால், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்பினர். இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த, பிந்து, 42, கனகதுர்கா, 44, ஆகிய இரு பெண்களை, கேரள அரசு, ரகசியமாக அய்யப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய வைத்தது. இந்த சம்பவம், அய்யப்ப பக்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து, கேரள போலீசார் கூறுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மலஷேியாவைச் சேர்ந்த மூன்று தமிழ் பெண்கள் உட்பட, 10 பெண்கள், இந்த சீசனில், இதுவரை தரிசனம் செய்துள்ளனர் என்றனர். இதையடுத்து, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ஹிந்து அமைப்பினர்,
மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், கேரளாவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் அரசுகள், தங்கள் நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், கேரளாவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது; அம்மாநிலத்தில் சுற்றுலா சென்றுள்ளோர், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. கும்பல் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், காமன்வெல்த் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சில இடங்களில், பொது சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இருந்தால், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளின் எச்சரிக்கை, கேரள சுற்றுலா துறைக்கு பெரியளவில் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இது குறித்து, கேரள சுற்றுலா துறை அமைச்சர், சுரேந்திரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கேரளாவுக்கு சுற்றுலா செல்வது தொடர்பாக, அமெரிக்கா, பிரிட்டன் அரசுகள், தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில சுற்றுலா துறைக்கு, கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அறிவுறுத்தல் அறிக்கைகள், கேரளாவுக்கு இழிவை ஏற்படுத்தி உள்ளன. கேரள அரசு வருவாயில், 10 சதவீதத்துக்கு மேல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையால் கிடைக்கிறது. தற்போது, இது முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.கேரளாவில், சமீபத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டங்களால், சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை, கேரளாவில் முன்னெப்போதும் இருந்ததில்லை. இந்த நிலை தொடர்ந்தால், கேரள சுற்றுலா துறைக்கு சாவு மணி அடிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்ததால், பக்தர்கள் வருகை குறைந்தது. இதனால், பக்தர்கள் நன்கொடை மூலம், தேவசம் போர்டுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்தது.தற்போது, சுற்றுலா வருவாயும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, கலக்கம் அடைந்துள்ளது. இதற்கிடையே, கேரளா முழுவதும் பதற்றம் நீடிப்பதால், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தந்திரியை நீக்கலாம்: சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியை, திருவாங்கூர் தேவசம் போர்டு, பணி நியமனம் செய்துள்ளது. போர்டு விரும்பினால், அவரை பணி நீக்கம் செய்ய முடியும். தந்திரி மீது, தேவசம் போர்டு அறிக்கை தாக்கல் செய்தபின், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். -கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம் போர்டு அமைச்சர்