ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவம் இன்று துவங்கி ஜன.15 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள் தங்கபல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருள்கிறார்.
அங்கு போர்வைபடி களைந்து திருவடி விளக்கம், அரையர்சேவை, தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடக்கிறது. அங்கிருந்து புறபட்டு மண்டபங்கள் எழுந்தருளி திருமுக்குளம் எண்ணெய்காப்பு மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு மதியம் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. இரவு 7 :00 மணிக்கு அங்கிருந்து புறபட்டு ரதவீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார். தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் பங்கேற்கிறார். தை மாதபிறப்பான ஜன.15 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.16 அன்று பெரியாழ்வார் சன்னிதியில் கனு வைபம் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.