பதிவு செய்த நாள்
07
ஜன
2019
03:01
உத்திரமேரூர்:மானாம்பதி, கடல் மங்கலம், சேர்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பழுதடைந்துள்ள அறநிலையத் துறை கோவில்களை சீரமைப்பது மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவது குறித்து, அதிகாரிகள் நேற்று (ஜன.,6ல்) ஆய்வு செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.அதில், மிகவும் பழுதடைந்த சில கோவில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள, அறநிலையத் துறை தீர்மானித்துள்ளது.
அதன்படி, சாலவாக்கத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், அழிசூர் கிராமத்தில் உள்ள அருளாளீஸ்வரர் மற்றும் வெங்கச்சேரி, கடம்பரநாதர் சுவாமி கோவில் போன்றவற்றை, சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது, கடல் மங்கலத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவில், மருதம் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தை புனரமைக்க, அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளது.
அது போல, சேர்ப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்காக, 18 லட்சம் ரூபாய் செலவில் அறைகள் கட்ட விரைவில் பணி துவங்க உள்ளது.
இக்கோவில்களை, வேலூர் உதவி கோட்டப் பொறியாளர், மோகனசுபா, உத்திரமேரூர் ஒன்றிய அறநிலையத்துறை செயல் அலுவலர், செந்தில்குமார் உள்ளிட்டோர் நேற்று (ஜன., 6ல்) ஆய்வு செய்தனர்.