பதிவு செய்த நாள்
08
ஜன
2019
12:01
கோவை: சபரிமலை விவகாரத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பிந்து, ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியில், தன் குழந்தையை சேர்க்க வந்தார். பக்தர்கள் எதிர்ப்பால், பின்புறம் வழியாக தப்பி ஓடினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாட்டில், கோழிக்கோடு, கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, 42, கண்ணுாரைச் சேர்ந்த, கனகதுர்கா, 40, ஆகிய பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன், சமீபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்து திரும்பியது, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இருவருக்கும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. பள்ளி ஆசிரியை பிந்துவுக்கு, எதிர்ப்பு அதிகமானதால், கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து, பாலக்காடு மாவட்டம், அகழி அருகே உள்ள சம்பர்பூர் என்ற பள்ளிக்கு விருப்ப மாறுதல் பெற்றார்; அங்கும், எதிர்ப்பு வலுத்து வருகிறது.நேற்று (ஜன., 7ல்) மதியம், ஆசிரியை பிந்து, தன், 9 வயது மகளை, சம்பர்பூரில் இருந்து, 20 கி.மீ.,யில், தமிழக எல்லையில், ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் பள்ளியில் சேர்க்க வந்தார்.
தகவலறிந்த அகழி, ஆனைகட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி முன் திரண்டதால், செய்வதறியாது திகைத்த பிந்து, மகளுடன், பள்ளியின் பின்புறம் வழியாக தப்பிசென்றார்.
வித்யாவனம் பள்ளி இயக்குனர் பிரேமா ரங்காச்சாரி, பிந்துவின் குழந்தையை, பள்ளியில் சேர்ப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றார்.அய்யப்ப பக்தர்களின்
மனதை புண்படுத்திய பிந்து மற்றும் கனகதுர்கா, தமிழகத்துக்குள் எங்கு வந்தாலும், அவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என, பக்தர்கள், பொதுமக்கள் ஆவேசத் துடன் தெரிவித்தனர்.