பதிவு செய்த நாள்
08
ஜன
2019
01:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கத்தேர் சீரமைக்கும் பணி, நேற்று (ஜன., 7ல்) துவங்கியது. பழனியில் உள்ள தங்கத்தேர் போன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கடந்த, 2006, மார்ச், 16ல், தங்கத்தேர் செய்யப்பட்டது.
பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு கட்டணம் செலுத்தி, தங்கத்தேரை மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து சென்று, வலம் வந்து வழிபடலாம். இவ்வாறு, பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், எவ்வித முன் அறிவிப்புமின்றி, தங்கத்தேர் முடக்கி வைக்கப்பட்டது.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, மீண்டும் தங்கத்தேர் ஓட்டம் நடக்கும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். கடந்த, 2016, பிப்., கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையிலும், தங்கத்தேர் இயக்கப்படவில்லை.
நீண்ட நாட்களாக இயக்கப்படாததால், தேர் பழுதடைந்தது. இதையடுத்து, கடந்த, 2018, செப்., மாதம் மாவட்டத்தின் அப்போதைய நீதிபதி மகிழேந்தி, தங்கத்தேர் இயக்கப்படாததற்கு விளக்கம் கேட்டார். விளக்கம் கொடுக்க முடியாமல் தவித்த, கோவில் நிர்வாகம்,
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. தற்போது, தங்கத்தேரை புதுப்பிக்க முடிவு செய்து, பணி துவங்கப்பட்டுள்ளது.