பதிவு செய்த நாள்
09
ஜன
2019
10:01
கொச்சி: சபரிமலையில் தரிசனம் நடத்திய பிந்து, கனகதுர்கா பக்தர்களா, அவர்கள் சபரிமலைக்கு வந்ததில் ரகசிய திட்டம் ஏதும் உள்ளதா, சென்னை மனிதி வாகனத்தை மட்டும் பம்பைக்கு அனுமதித்தது எப்படி என மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளது.
பிந்து, கனகதுர்கா என இரண்டு இளம்பெண்களை தரிசனம் நடத்த வைத்து சபரிமலை ஐதீகத்தை பினராயி விஜயன் தகர்த்தார். இதனால் சபரிமலை நடை அடைக்கப்பட்டு சுத்திகலச பூஜை நடத்தப்பட்டது. இதற்காக தந்திரியை அரக்கன் என்று அமைச்சர் சுதாகரன் விமர்சித்தது மட்டுமின்றி, 15 நாட்களில் விளக்கம் அளிக்க தந்திரிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணை: இந்நிலையில் பெண்கள் வருகை தொடர்பாக, உயர்நீதிமன்றம் நியமித்துள்ள தனிஆணையர் மனோஜ் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது சபரிமலை பெஞ்ச் நீதிபதிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, பிந்து, கனகதுர்கா இருவரும் பக்தர்களா, ரகசிய திட்டத்துடன் வந்தனரா, சாதித்ததாக பெயர் எடுக்க சபரிமலை வந்தார்களா, சென்னை மனிதி அமைப்பு பெண்கள் வந்த வாகனம் மட்டும் பம்பைக்கு அனுமதிக்கப்பட்டது எப்படி என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். பின்னர், தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும் களமாக சபரிமலையை அரசோ, போலீஸ் உள்ளிட்ட எந்த ஒரு அமைப்புமோ கருத முடியாது. அது பக்தர்களுக்கு மட்டும் உரிமைப்பட்ட இடம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல் பதிலளிக்கும்போது, பிந்துவும், கனகதுர்காவும் பக்தர்கள் தான். மனிதி அமைப்பின் வாகனம், பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் பம்பை வரை அனுமதிக்கப்பட்டது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நிலக்கல்லில் இருந்து பஸ்சில் அனுப்ப முடியாதது அங்கு பணியில் இருந்த போலீசின் திறமையின்மை என்று கூறி வேறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். நீதிபதிகளின் கிடுக்கிப்பிடியால் அரசும், உயர் போலீஸ் அதிகாரிகளும் அதிர்ந்துபோய் உள்ளனர்.