பதிவு செய்த நாள்
14
ஜன
2019
10:01
பெற்றோர்- காஷ்யப முனிவர், அதிதி.
சகோதரர்கள்: கருடன், அருணன்
மனைவியர்: உஷா, பிரத்யுஷா (சாயாதேவி)
மகன்கள்: எமதர்மன், சனீஸ்வரர், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்
மகள்கள்: யமுனை, பத்திரை
பார்த்தபின் சாப்பிடுங்க: தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.
முதல் கடவுள்: மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை ‘சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், ‘முதல் கடவுள் என்ற சிறப்புக்கு உரியவராகிறார்.
அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.