பதிவு செய்த நாள்
14
ஜன
2019
12:01
திருப்பூர்: பொங்கல் பண்டிகை உற்சாகம், நேற்று கடைவீதியில் களை கட்டியது; பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.தமிழர் திருநாளாம், தை திருநாளை வரவேற்க, மக்கள் தயாராகி வருகின்றனர்.
நகர்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில், பொங்கல், மாட்டுப் பொங்கல், போகி களை கட்டும்.கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு வாசற்படி, திண்ணைக்கு சுண்ணாம்பு அடித்தும், சேதமான திண்ணைகளை சரி செய்து, சாணத்தால் மெழுகி சுத்தம் செய்துள்ளனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், திருப்பூர் நகரில் உள்ள கடைகளில் பொங்கல் பர்சேஸ் சூடு பிடித்துள்ளது.இப்பண்டிகையில், கோலம் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நிலையில், கோலப்பொடி, கலர் பொடிகளை பெண்கள் அதிகளவில் வாங்குகின்றனர். அதற்கென, ஆங்காங்கே ஏராளமான தற்காலிக கடைகள் அமைக் கப்பட்டுள்ளன; ஒரு பாக்கெட், 5 - 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.பச்சரிசி, பாசிப்பருப்பு, பால், தேங்காய் துருவல், ஏலக்காய், நெய், முந்திரி, திராட்சை என, பல வகை பொருட்களை சேர்த்தாலும், பொங்கலை இனிக்க செய்வது வெல்லம் மட்டுமே.
பல சரக்கு மளிகை கடைகளில், பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட குண்டு வெல்லம், கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கரும்பு, திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது; இங்கு, மொத்த, சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.மாட்டுப் பொங்கலுக்கு தேவையான மஞ்சள், குங்குமம் வைத்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பலுான் கட்டி, கழுத்தில் மணி கட்டி, மாலை அணிவித்து, பல்வேறு அலங்காரம் செய்து படையலிட்டு மாட்டிற்கு வழங்குவர்; மாடுகளுக்கு, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு கட்டுவது, வழக்கம்.
ஒரு கயிறு, 15 - 60 ரூபாய் வரை, அதன் தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது. ஆக, பொங்கல் பண்டிகை விற்பனை, கடைகளில் சூடுபிடித்துள்ளது.பூ விலை துள்ளல்...திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், திண்டுக்கல் நிலக் கோட்டை பகுதியில் இருந்து, தினசரி, 7 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பண்டிகை நாட்களில், 25 - 30 டன் பூக்கள் வரும். ஏற்கனவே, கடும் பனிப்பொழிவால், பூ வரத்து பாதியாக குறைந்துள்ளது;
மார்க்கெட்டுக்கு, 10 - 15 டன் பூக்கள் மட்டுமே வருகிறது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி விற்பனை அதிகரித்ததால், மல்லி விலை உச்சத்தை தொட்டது. நேற்று ஜாதிமல்லி கிலோ, ஆயிரம் ரூபாய், பட்டுப்பூ, 100 ரூபாய், செவ்வந்தி, சம்பங்கி, 120 ரூபாய், அரளி, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது.