பதிவு செய்த நாள்
14
ஜன
2019
12:01
பழநி: உடுமலை, தாராபுரம், கோவை, திண்டுக்கல் ரோடு சேதங்கள் சரி செய்யப்படவில்லை. இதனால் பாத யாத்திரையாக பல்வேறு பகுதிகளில் இருந்து பழநி வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நினைத்தால் கூட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.பக்தர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் சிலவற்றை பார்க்கலாம்.
ஆக்கிரமிப்பால் அவதிசபரிமலை சீசன், தைப்பூசவிழா வருகையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பக்தர்களின் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. அவை புதுதாராபுரம்ரோடு, பஸ் ஸ்டாண்ட் அடிவாரம் பூங்காரோடு, திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதே போல கிரிவீதியில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைப்பதில்லை. அகற்றிய சில நிமிடங்களில் மீண்டும் வாகனங்களை நிறுத்தி கிரிவீதியை ஆக்கிரமிக்கின்றனர். இதற்கு தொடர்ச்சியான நடவடிக்கை தேவை.-----போலி காணிக்கை பொருட்கள்பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தங்கம், வெள்ளியிலான பொருட்களை வாங்குகின்றனர். இதனால் கிரிவீதி, அடிவாரப்பகுதி நடைபாதை வியாபாரிகள், சிறுகடைக்காரர்கள் தங்கம், வெள்ளியாலானவை என குத்துவிளக்குகள், வேல், சுவாமி சிலைகள், கால், தலை, உருவம், பாதம் மற்றும் டாலர்கள், விளக்குகள் என பல வகையான பொருட்களை விற்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை போலியாக இருக்கின்றன. அதாவது, அலுமினிய தகடுகளில் தங்கம், வெள்ளி மூலாம் பூசி பொருட்களை தயாரித்து ஏமாற்றுகின்றனர்.
பார்ப்பதற்கு அசல் தங்கம், வெள்ளி போல பளபளவென தெரிவதாலும், விலை குறைவு என்பதாலும் பலரும் நம்பி வாங்கி ஏமாறுகின்றனர். விலையை மட்டும் விசாரிக்கும் பக்தர்கள் இனி தரத்தையும் ஆராய வேண்டியது அவசியும். அதே போல போலி காணிக்கை பொருள் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் செக் வைக்க வேண்டும்.தரமற்ற உணவு விற்பனைதைப்பூச விழாவையொட்டி கல்லாக்கட்டும் எண்ணத்தில் பழநி நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி ரோட்டோரங்களில் திடீர் ஓட்டல், டீ, வடை, ஜூஸ் கடைகள் வைக்கின்றனர். மலைக்க வைக்கும் விலையை நிர்ணயம் செய்யும் வியாபாரிகள், பொருளின் தரத்தில் அக்கறை காட்டுவதில்லை. பழைய எண்ணெய்யை பயன்படுத்தி திரும்ப, திரும்ப பலகாரங்களை தயார் செய்கின்றனர். விற்பனையாகாத முந்தைய நாள் உணவு பொருட்களை சுட வைத்து மறுநாள் விற்கின்றனர். இதனால் பக்தர்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் ரோட்டோரக் கடைகள், இடும்பன்கோயில், கிரிவீதிகளில் உள்ள கடைகளில், விற்பனை செய்யப்படும், உணவு பொருட்களை சோதனை செய்து, தரமற்ற உணப்பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.பெயரளவில் பாலிதீன் தடைபழநி பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் உபயோகம் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.
பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை செய்யப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. உணவுப் பொருட்களை, பாலிதீன் பைகளில் வைத்து விற்கின்றனர். பழநியில் இருந்து- கொடைக்கானல், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி செல்லும் பகுதி களில் பாலிதீன் பை, பிளாஸ்டிக் குவளை உபயோகம் அதிகமாக உள்ளது.சபரிமலை, தைப்பூச சீசன் காரணமாக பக்தர்கள் ரோப்கார், வின்ச்- போன்றவற்றில் செல்ல சாதாரண நாட்களில் ஒரு மணி நேரமும், சனி, ஞாயிறு, முகூர்த்ததினம், விடுமுறை நாட்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பழநி வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களிடம் ரோப்கார், வின்ச் மூலம் விரைவாக மலைக்கோயில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக சிலர் ஏமாற்றி வசூலிக்கின்றனர். ஆனால் கோயில் சார்பில் கைடுகள் கிடையாது. எனவே பக்தர்கள், பயணிகள் உஷாராக இருக்க வேண்டும்.இதே போல இடும்பன்குளம், கிரிவீதி, மலைக்கோயில் உள்ளிட்ட கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பக்தர்கள் போர்வையில் சிலர் நுழைந்து பிக்பாக்கெட், செயின் பறிப்பில ஈடுபடுகின்றனர். எனவே கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்கும் வகையில் கூடுதல் இடங்களில் போர்டுகள் வைக்க வேண்டும்.
ரோடுகளை செப்பனிட வேண்டும்ஒட்டன்சத்திரம்-, பழநி இடையே பாத யாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட தனிநடைபாதை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. புதர்மண்டி கிடக்கிறது. நடைபாதையை பயன்படுத்த முடியாமல், ரோட்டோரத்தில் நடக்க வேண்டியுள்ளது. தைப்பூச விழா துவங்க உள்ள நிலையில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக வாடிப்பட்டி, கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மூலசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக செப்பனிட வேண்டும்.-சிவா, பாத யாத்திரை பக்தர்,
சிறுவர்களுடன் இணைந்து, பெண்கள் சிலரும் யாசகம் கேட்கும் அவலம் தொடர்கதையாகிப் போனது.சிறப்பு ரயில் அவசியம்தைப்பூச விழா, விடுமுறை நாட்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக பொங்கல் விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோகின்றது. பலரும் பஸ், ரயில்களில் இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே பொங்கல் விடுமுறைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்க போக்குவரத்து, ரயில்வே அதிகாரிகள் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.