பதிவு செய்த நாள்
14
ஜன
2019
01:01
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, அய்யனார் கோவில் குதிரைக்கு, பிளாஸ்டிக் மாலைக்கு பதிலாக, காகித மாலை அணிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும், பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமக திருவிழா நடக்கும்.தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, அய்யனார் வாகனமான, ஆசியாவிலேயே மிகப் பெரிய, 33 அடி உயர குதிரை சிலைக்கு, பிளாஸ்டிக் ஜிகினா மாலை அணிவித்து வழிபடுவர்.
இப்படி, பல ஆயிரக்கணக்கான மாலைகள் அணிவிக்கப்படும்.இதனால், ஒரு ஜிகினா மாலையின் விலை, ஐந்து முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும். இந்த மாலைகள், திருவிழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, ஆலங்குடி, கீரமங்கலம், அறந்தாங்கி, குளமங்கலம் உட்பட இதர பகுதிகளில் தயாரிக்கப்படும்.தற்போது, பிளாஸ்டிக் தடை காரணமாக, குதிரைக்கு ஜிகினா மாலை அணிவிக்காமல், காகிதப் பூக்களால் ஆன மாலைகளை அணிவிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.