செஞ்சி: மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற வாகனங்கள் வருவதற்கும், போவதற்கும் ஒரே வழியை பயன்படுத்துவதால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். செஞ்சியிலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் வளத்தியில் உள்ள குறுகலான திருப்பத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. காலை 7.30 மணிக்கு கோபால விநாயகர் பூஜையும், இரவு 9 மணிக்கு கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்கு வளத்தி வழியே பிரதானமாக உள்ளது. இதே வழியில் வேலூர், வந்தவாசி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களும் செல்கின்றன.இதில் வளத்தி கிராமத்தின் வழியாக செல்லும் போது ஜெயின் கோவில் அருகே குறுகலான வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவை நேராக மாற்றுவதற்கு இடையூறாக மேற்கில் கோவில் சுற்று சுவரும், எதிர் புறம் ஓட்டு வீடு ஒன்றும் உள்ளது.இந்த வழியில் செல்லும் வாகனங்கள் திருப்பத்தில் மிக நிதானமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் கவனிக்காமல் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் வரும் போது சிக்கல் ஏற்படுகிறது.நேற்று முன்தினம் மேல்மலையனூர் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வந்தன. அனைத்து வாகனங்களும் வளத்தி வழியாக வந்து சென்றன. பெரும்பான்மையான வாகன ஓட்டிகளுக்கு வளத்தியில் உள்ள குறுகலான இடம் இருப்பது சரிவர தெரியாது.இதனால் அவசரப்பட்டு சென்ற வாகனங்கள் குறுகலான வளைவில் சிக்கியதால், நீண்ட தொலை விற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு வரிசையில் நின்றதால் போக்குவரத்து சீரடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.மேல்மலையனூரில் இருந்து செஞ்சி, வேலூர் மார்கமாக செல்வதற்கு சாத்தாம்பாடி கிராமம் வழியாக மாற்று வழிகள் உள்ளன. மேல்மலையனூரில் இருந்து திரும்பி வருகின்ற வாகனங்களை இந்த வழியாக திருப்பி அனுப்பி, வளத்தியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.போலீசார் அனைத்து வாகனங்களையும் வளத்தி வழியில் சென்று வரும்படி செய்வதால் வளத்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி மாலை தீமிதி விழாவும், 26ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடக்க உள்ளது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.இதனால் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை, தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.