பழநி: பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா ஜன.24 வரை பத்து நாட்கள் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள், அலகு குத்தி பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, பரிவார தெய்வங்களுடன் கொடிப்படத்துடன் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தனர். அதன்பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காலை 11:00 மணிக்கு பக்தர்களின் அரோகரா சரண கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வாக ஜன.20ல் இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், ஜன.21 தைசப்பூசம் அன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர். கொடியேற்றத்தில் சித்தநாதன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.