சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்ற நிலையில் சன்னிதானம் முன்பு தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது. 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகிறது. கன்னி ஐயப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக மாளிகைப்புறத்தம்மனுக்கு ஐயப்பன் உறுதியளித்ததாக ஐதீகம்.அதன் பேரில், 17-ம் தேதி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு சன்னதி முன்பு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருள்வார்.18-ம் தேதி சரங்குத்திக்கு செல்லும் அம்மன் அங்கு கன்னி பக்தர்கள் வந்த அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்குச்சிகளை பார்த்துவிட்டு, ஆரவாரம் இல்லாமல் கோயிலுக்கு திரும்புவார்.19-ம் தேதி வரை தினமும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் படி பூஜை நடைபெறும்.18-ம் தேதி காலை 10:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு 10:00 மணி வரை தரிசனம் செய்யலாம். அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.