பதிவு செய்த நாள்
17
ஜன
2019
01:01
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், 800 ஆண்டு பழமையான ஐயனார் சிற்பம் கண்டறியப் பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் குண்டடம், எரகாம்பட்டி கிராமத்தில், பண்டைய வணிக பெருவழி அருகே, 800 ஆண்டு பழமையான ஐயனார் சிற்பத்தை, வீரராசேந்திரன் தொல்லியல் ஆய்வு மையத்தினர் மேற்பரப்பு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வு மையத்தைச்சேர்ந்த ரவிக்குமார், பொன்னுசாமி, வேலுசாமி, சதாசிவம் ஆகியோர் கூறியதாவது :சங்க காலம் முதலே, ஐயனார் வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது.
பழங்காலத்தில் தரைவழிப்பயணம் செய்து வணிகம் செய்த வர்களை, சாத்துவர், கடல் வழி வணிகத்தில் ஈடுபட்டவர்களை நாயக்கர் என அழைக்கப்பட்டனர்.வணிகத்திற்கு வெளியூர் செல்லும் போது, தங்களை பாதுகாத்துக்கொள்ள, அத்திகோசத்தார், வீரகோசத்தார் என்ற படைகளை கொண்டிருந்தனர்.
பயணம் மேற்கொள்ளும் பகுதிகளில், வணிகம் செழிக்க, ஐயனார் சிலை அமைத்து வழிபட்டனர்.தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானதும், மேலைநாட்டவர் களும் பயன்படுத்திய, ராஜகேசரிப்பெருவழி அருகே, இந்த ஐயனார் சிற்பம் உள்ளது.800 ஆண்டு பழமையான இச்சிற்பம், 120 செ.மீ., அகலமும், 60 செ.மீ., உயரமும் கொண்டதாகவும், ஐயனார் பீடத்தின் மீது வலது காலை மடித்து வைத்த நிலையிலும், இடது காலை குத்திட்டு வைத்து, அதன் மீது இடது கையை வைத்தபடியும் அமைந்துள்ளது.
வலது கையில் செண்டு ஆயுத ஏந்தி, தலையில் ஜடாபுரம் அலங்காரம், இடது காதில் பத்ர குண்டலம், வலது காதில் குலை, இடுப்பில் உதர பந்தமும், கையின் மேல்பகுதியில் தோள் வாளை அணிந்து மகாராஜலீலாசனத்தில் உள்ளார்.கீழ்பீடத்தில், பூரணை, புஷ்கலை என்ற இரு மனைவியர் உள்ளனர். மேல் பாகத்தில், பக்கத்திற்கு ஒருவராக, இரு பணிப்பெண்கள் சாமரம் வீசி வருவது போல் அமைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சங்க காலத்தில் வீர வணக்கத்தின் அடிப்படையில் தோன்றிய, ஐயனார் வழிபாடு, இன்றளவும் கிராமங்களில் தொடர்கிறது.