பதிவு செய்த நாள்
17
ஜன
2019
01:01
ஊட்டி:ஊட்டி அருகே அமைந்துள்ள கேத்தி கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கேத்தி ஊரில் நடந்தது.
திருவிழாவுக்காக, விரதம் இருந்துவந்த ெஹத்தையம்மன் பக்தர்கள், மடிமனையில் இருந்து, செங்கோல் ஏந்தி, வண்ணக்குடைகளின் கீழ், கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அம்மனை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கேத்தி சுற்றுவட்டார கிராமங்களான, கேத்தி ஊர், மேல் அச்சனகல், கீழ் அச்சனகல், மனைப்பட்டு, தீதட்டி, சோரைகுண்டு, கெராடா, கம்மந்து, உல்லாடா, எள்ளநள்ளி, கேர்கம்பை, கெக்கட்டி, மொக்கட்டி மற்றும் பொரோரை ஆகிய கிராமங்களை சேர்ந்த ஹெத்தையம்மன் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கோவிலில் அம்மன் அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலாசார உடையணிந்து, விழாவில் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை, கேத்தி, 14 ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.