பதிவு செய்த நாள்
17
ஜன
2019
03:01
ஈரோடு: ஈரோடு வழியாக, பழநிக்கு தைப்பூச திருவிழாவில் முருகப்பெருமானை தரிசிக்க, பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள், பழநியில் தைப்பூசத்தின்போது முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடனுக்கான கோழி, மாடு, கன்று போன்றவைகளை அழைத்துக் கொண்டும், தானியங்களை எடுத்தும் பாதயாத்திரை செல்வர். ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், பாதயாத்திரை பக்தர்களின் சட்டையிலும், அவர்களுடன்
செல்லும் வாகனங்கள், கால்நடைகள் மீதும், ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிஅனுப்புகின்றனர்.
தவிர, பல்வேறு அமைப்புகள் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், காளை மாட்டு சிலை, நாடார்மேடு, அவல்பூந்துறை உட்பட சில இடங்களில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்குகின்றனர்.
கடந்த, 10 நாட்களாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. பொங்கல் பண்டிகை முதல், கடந்த இரண்டு நாட்களாக, பாதயாத்திரையாக
செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும், 21ல் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதால், இன்னும் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை பயணத்தை, ஈரோடு பகுதியில் அதிகமாக காண முடியும்.