பதிவு செய்த நாள்
21
ஜன
2019
02:01
வடவள்ளி:மருதமலையில், இன்று (ஜன., 21ல்) தைப்பூச திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.தை மாதம், பூச நட்சத்திரம் வரும் நாள், முருகனுக்கு மிக உகந்த நாள். அந்த நாளே, தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருவிழா, கோவை மருதமலையில் இன்று (ஜன., 21ல்) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மருதமலைக்கு, நேற்று (ஜன., 20ல்) காலை முதலே, காவடி, பால்குடங்களுடன் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்தனர்.இன்று, (ஜன., 21ல்) அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப் பட்டு, காலை, 5:00 மணிக்கு யாகசாலை பூஜை. காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும், பகல், 12:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதரமாய் வெள்ளையானை வாகனத்தில் திருவீதியுலா வந்து மேஷ வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளுதலும், 1:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடைபெறுகிறது.
இன்று (ஜன., 21ல்) திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஐ.ஓ.பி., காலனி முதல் மருதமலை அடிவாரம் செல்லும் பக்தர்கள், மருதமலை யில் இருந்து திரும்பும் பக்தர்கள், அன்னை இந்திரா நகர், ஐ.ஓ.பி., காலனி வழியாக செல்ல வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக, சாலை, பார்க்கிங் பகுதிகள் சி.சி.டிவி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.