பதிவு செய்த நாள்
24
பிப்
2012
10:02
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 27ம் தேதி மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசி மகப் பெருவிழா வரும் 27ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 5.40 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு பிராமணர் சமுதாய மண்டகப்படி தீபாராதனை, ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து வரும் மார்ச் 5ம் தேதி வரை காலையில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல், அபிஷேக, தீபாராதனை, மாலையில் சிறப்பு சொற்பொழிவு, இரவு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. விழாவின் 9ம் நாளான 6ம் தேதி காலையில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல், 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், அபிஷேக, தீபாராதனை, மாலையில் சிறப்பு சொற்பொழிவு, இரவு வணிக வைசியர் சமுதாய மண்டகப்படி தீபாராதனை, கனக பல்லக்கில் சுவாமி-அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. வரும் 7ம் தேதி காலையில் தீர்த்தவாரி, அபிஷேக, தீபாராதனை, மாலையில் நாதஸ்வர கச்சேரி, புஷ்பாஞ்சலி, இரவு பல்சுவை நிகழ்ச்சி, நாடார் சமுதாய மண்டகப்படி தீபாராதனை, சிறப்பு வாணவேடிக்கை, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. 8ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி, கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.