திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயில் உபகோயிலான வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று 10ம் திருநாள் அன்று தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளியதும் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நான்கு ரதவீதியும் வலம் வந்து நிலை சேர்ந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் செல்லத்துரை, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி தினசரி கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் செய்திருந்தனர்.