பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
காளிப்பட்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், இன்று (ஜன., 21ல்) தைப்பூச திருவிழா தேரோட்டம் நடக்கிறது. அதற்காக, கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சேலம் அருகேவுள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கடந்த, 17ல், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சப்பரங்களில் சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று (ஜன., 20ல்)மதியம், மூலவர் கந்தசாமிக்கு, சந்தனகாப்பு அலங்காரம், நள்ளிரவு, 12:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், இன்று (ஜன., 21ல்)நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சர்வ அலங்காரத்தில் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்வர். மதியம், 3:00 மணிக்கு, பக்தர்கள் வெள்ளத்தில், தேரோட்டம் நடக்கும்.
இரவு, 8:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கும். நாளை, சந்தனக்காப்பு அலங்காரம், இரவு, முத்துப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கவுள்ளது. 23 இரவு, 7:00 மணிக்கு, சுவாமி, மயில் வாகனம், மின்அலங்கார சப்பரம், மலர் சப்பரத்தில், திருவீதி உலா வரச்செய்வர். காலை, 3:00 மணிக்கு, வாண வேடிக்கையுடன், சத்தாபரண மகாமேரு ஊர்வலம் நடக்கவுள்ளது. 24ல், வசந்த விழாவுடன் விழா நிறை வடையும்.
இத்திருவிழாவையொட்டி, சேலம், நாமக்கல் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலிருந்து, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி, ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாளை முதல், பாரம்பரிய மாட்டுச்சந்தை, சிறப்பு நீதிமன்றம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சுதா, பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி உள்ளிட்ட உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.