பதிவு செய்த நாள்
22
ஜன
2019
12:01
திருப்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள கோவில்களில், கந்தனுக்கு அரோகரா கோஷத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்தன் காலடியை வணங்கினர். திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை முருகன் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில்களில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று, கோலாகலமாக நடந்தது.
தேர்த்திருவிழா, கடந்த, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 18ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலையில், சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 19ம் தேதி, மயில் வாகன காட்சியும், 20ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும் நடைபெற்றது. மலைக்கோவிலில் நேற்று, காலை, 6:00 மணிக்கு, சுவாமி, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன், மணக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விநாயகர், தனித்தேரில் எழுந்தருளினார். சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து, காவடி எடுத்துவந்த பக்தர்கள், குழந்தை வேலாயுதசுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. காவடி பூஜை நிறைவடைந்து, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
குழந்தைவேலாயுதசாமி தேர்களை, பக்தர்கள், அரோகரா கோஷத்துடன், வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க, மங்களை இசையுடன், நான்கு தேர் வீதிகள் வழியாக, தேர்கள் வலம் வந்தன.இன்று இரவு 7:00 மணிக்கு, பரிவேட்டை, குதிரை வாகன காட்சியும், நாளை மகா தரிசனமும், 24ல், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று துவங்கி, மூன்று நாட்களுக்கு, தினமும், இரவு, 7:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.அவிநாசி அருகே மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. சுற்றுப்புறத்தில் உள்ள, பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர். மேலும், பலர் பால் காவடி, தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி, உதயகிரி முத்துவேலாயுத சுவாமி அருட்பணி மன்றம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.