பதிவு செய்த நாள்
22
ஜன
2019
01:01
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூசம் திருவிழா, விமரிசையாக நடைபெற்றது.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று, தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.உற்சவர் சுப்ரமணியர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், உற்சவர் ஞானகிரி மலை குன்று மீது, மாலை, 6:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர்.
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக, வல்லக்கோட்டை கோவிலுக்கு வந்தனர்.திருப்போரூர்:‑ கந்தசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், ஏராளமான பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி, காவடிகள் எடுத்து, காது குத்தி, துலாபாரம் மேற்கொண்டும் பிரார்த்தனை நிறைவேற்றினர்.வாலாஜாபாத்: தொள்ளாழி கிராமத்தில் உள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பகல், 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.செங்கல்பட்டு: வேதநாராயணபுரத்தில், பாலமுருகன் கோவிலுக்கு, 504 பால் குடங்கள் மற்றும் காவடி ஊர்வலம், பாலாற்றங்கரையில் துவங்கி, தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தடைந்தது. தொடர்ந்து, பாலமுருகனுக்கு பாலபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.மதுராந்தகம்: கருங்குழி ராகவேந்திரர் கோவிலில், தை மாதத்தை முன்னிட்டு, நேற்று, பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சத்யநாராயணா பூஜை மற்றும் சிவலிங்க பூஜைகளும் நடந்தேறின.யோகபீடத்தில் இருந்து, தவயோகி ரகோத்துவ சுவாமி, மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், ஆண்டுதோறும், தைப்பூச தினத்தன்று, அன்னதான பூஜை நடைபெறுகிறது. நேற்று காலை, 9:00 மணிக்கு, மங்கள இசையுடன் அன்னதானம் நடந்தது.தொடர்ந்து, பக்தி சொற்பொழிவும், முருகனின் பக்தி பாடல்களும் பாடப்பட்டன. பகல், 12:15 மணிக்கு தீபஜோதி தரிசனம் நடந்தது.சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த, நடுப்பழனி என அழைக்கப்படும், பெருங்கருணை கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது.நேற்று, தைப்பூசத் திருவிழாவையொட்டி, இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.காலை, பால்குடம், பன்னீர் குடம், காவடிகளுடன் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.மாமல்லபுரம்: மாமல்ல புரம், மல்லிகேஸ்வரர் கோவிலில், தைப்பூச உற்சவ நாளான நேற்று காலை, சிவபெருமான், அம்பாள், முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய மூலவர்களுக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.தொடர்ந்து, முருகர், மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன், வீதியுலா சென்றார்; பக்தர்கள் வழிபட்டனர்.திருப்போரூரில் களைகட்டிய பூசம்திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், ஏராளமான பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி, காவடிகள் எடுத்து, காது குத்தி, துலாபாரம் மேற்கொண்டும் பிரார்த்தனை நிறைவேற்றினர்.சென்னை பக்தர்கள் பலர், நடைபயணம் மேற்கொண்டு கந்தசுவாமியை வழிபட்டனர்.மேலும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேம்படி விநாயகர் கோவிலிருந்து பால் குடம் சுமந்து, கிரிவலம் வந்து, கந்தனுக்கு அபிஷேகம் செய்தனர்.புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளிட்டவற்றிலும் தைபூசத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.