பதிவு செய்த நாள்
23
ஜன
2019
01:01
மேட்டுப்பாளையம்:காரமடை நஞ்சுண்டேஸ்வர் கோவிலில் உள்ள ஆறுமுக வேலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.
காரமடை நஞ்சுண்டேஸ்வர் கோவிலில் ஆறுமுக வேலவர் சன்னதி உள்ளது. திருமுருக பக்தர்கள் குழுவினர் தைப்பூசத்துக்கு அடுத்த நாள் ஆண்டு விழா கொண்டாடுவர். நேற்று (ஜன., 22ல்), 43ம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.
கன்னார்பாளையம் தன்னாசியப்பன் கோவிலில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து கன்னார்பாளையம் ரோடு, கோவை மெயின் ரோடு, தேர் செல்லும் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை அடைந்தனர்.ஆறுமுக வேலவர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிேஷகம் செய்யப்பட்டது.பின், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுக வேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னாதனம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை திருமுருக பக்தர்கள் தலைவர் கணேசன், செயலாளர் தண்டாயுதபாணி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.