பதிவு செய்த நாள்
24
பிப்
2012
03:02
*உண்மையைப் பேசுங்கள். கேட்பவர்களுக்கு இயன்றதை வழங்குங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
* தாயையும் தந்தையையும் ஆதரித்தல், மனைவியையும் குழந்தையையும் போற்றுதல், அமைதியானதொரு வாழ்க்கை நடத்துதல் தான் மாபெரும் நற்பாக்கியம்.
* எந்த காலத்திலும் பகைமை பகைமையால் நீங்கிவிடுவதில்லை. அன்பு ஒன்றினால் மட்டுமே பகைமை நீங்கும் என்பது தான் உலக நியதி.
* பழக்கப்படுத்திய யானையைத் தான் போர் முனைக்கு நடத்திச் செல்வார்கள். அதுபோல நல்ல வழியில் பழகிப் பண்பட்டவனே மக்களில் சிறந்தவன். அவனை பழிச் சொற்கள் எதுவும் பாதிக்காது.
* ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலும், செயல்புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சியும் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.
* நல்ல பண்புள்ள மனிதன், இந்த பிறவியில் மட்டுமல்லாது, அடுத்த பிறவியிலும் ஆனந்தமடைகிறான். அவன் தன் சொந்தச் செயலின் மூலம் நல்ல பயன்களைக் காணும் போது பேரானந்தமுற்று பெருங்களிப்பு அடைகிறான்.
* மனிதன், தான் செய்த பாவச் செயலின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. தப்பித்து ஒளிந்து கொள்ளக் கூடிய இடம் அகன்ற
வானத்திலும் இல்லை. ஆழ்ந்த கடலிலும் இல்லை. உயர்ந்த மலைக்குகையிலும் இல்லை. எனவே பாவம் செய்யாமலிருப்பது நல்லது.
* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான். வாழ்க்கையில் வரும் தடைக்கற்களை உடைத்து நொறுக்கி முன்னேறு. எதிர்க்காற்றைக் கண்டு அஞ்சாதே.
* அறிவுக்கூர்மையும், நேர்மையும், உறுதிப்பாடும் உள்ளவராய் உங்களோடு ஒத்துப் போகக்கூடியவராய் ஒரு துணை கிடைத்தால், அவரை வழித்துணையாய்க் கொண்டு அனைத்துக் கவலைகளையும் விட்டு விட்டு கருத்துடனும் களிப்புடனும் அவரையே பின்பற்றிச் செல்லலாம்.
* சந்தனக்கட்டை, மல்லிகை முதலியவற்றின் மணம் காற்றின் எதிர்த் திசையில் செல்வதில்லை, ஆனால், நல்லவர்களின் புகழ் மணமோ சூறைக் காற்றையும் எதிர்த்துச் செல்கிறது. நல்ல மனிதனின் பெருமை எந்தத் திசையிலும் பரவி நிற்கிறது.
* கோபத்தை மென்மையால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும்.
* நல்ல விஷயங்களை கடைபிடிப்பதில் வைராக்கிய மாக இருப்பது நல்லது தான். ஆனால், பிறர் பாராட்ட வேண்டுமே என்பதற்காக, அவர்கள் முன்னால் மட்டும் அதைக் கடைபிடித்தால் போதாது. எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
* உடலையும், நாக்கையும், மனதையும் அடக்கும் அறிவாளிகளே உண்மையான பணிவாளர்கள்.
* அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, அறிவுடன் தன்னிறைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
* ஒருவனது வெற்றி இன்னொருவனுக்கு வெறுப்பை மூட்டுகிறது. தோல்வி அடைந்தோர் வேதனையில் வாழ்கின்றனர். வெற்றியையும் தோல்வியையும் விட்டுக் கொடுத்து சமாதானமாக வாழ்பவர்களே இன்பமாக வாழ்கின்றனர்.
* மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி காட்டுதல், நல்ல அறிவுரைகளைக் கேட்டல்...இந்த குணங்களைக் கொண்டவனே அதிர்ஷ்டக்காரன்.
-முழங்குகிறார் புத்தர்