சின்னமனுார் : குச்சனுார் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார தலமான இங்கு தோஷ நிவர்த்திக்காக ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக வாரத்தின் சனியன்று கூட்டம் களைகட்டும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு அடுத்த படியாக அதிக வருவாய் இந்த கோயிலுக்கு கிடைக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அறநிலையத்துறை தயாராகவில்லை.
தரிசனம் முடிந்து பக்தர்கள் அமர்வதற்காக ரூ.88 லட்சம் மதிப்பில் மண்டபம் கட்டப்பட்டது. துாய்மைப்படுத்தப்படாமல் கிடப்பதால் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலையுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. பக்தர்கள் வசதிக்காக பல ஆயிரம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் பராமரிப்பில்லாததால் பயன்பாடின்றி உள்ளது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் குடிநீர் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஆண்டுக்கு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தரும் கோயிலில் அடிப்படை வசதி ஜீரோவாக இருப்பதை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.