பதிவு செய்த நாள்
29
ஜன
2019
11:01
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தை மாத தேய்பிறை அஷ்டமி நாளான, நேற்று, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணி யில் தீபமேற்றி, நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு. காலபைரவருக்கு அஷ்டபைரவயாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சன குபேரயாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.