பதிவு செய்த நாள்
02
பிப்
2019
12:02
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில், நாளை மறுநாள், ஸ்தலசயன பெருமாள், மகோதய புனித நீராடல் உற்சவம் நடக்கிறது.இந்து மத நடைமுறையில், அமாவாசை, மாத பிறப்பு, சூரிய, சந்திர கிரகண காலங்கள், புனித காலமாக கருதப்படுகின்றன. குறிப்பிட்ட நாட்கள், முக்கிய நட்சத்திர, திதி, ராசி நாளாக அமைந்து, புனித நாளாக விளங்குகின்றன.
தை மாத, அமாவாசை நாள், ஞாயிறன்று, திருவோண நட்சத்திர நாளாக அமைந்தால், அர்த்தோதயம்; தை மாத, அமாவாசை நாள், திங்களன்று, திருவோண நட்சத்திர நாளாக அமைந்தால், மகோதயம் என, புனித நாளாக விளங்குகிறது.இத்தகைய நாட்களில், புனித நதிகள், தீர்த்தங்கள், கடலில் புனித நீராடி, நம் முன்னோர்க்கு, தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி பெறலாம். அமாவாசை, மகாளய நாட்களில், தர்ப்பணம் செய்யாதோர், மகோதய நாளில் செய்யலாம்.நீண்டகாலத்திற்கு ஒருமுறையே, இத்தகைய நாட்கள் அமையும். வரும், 4ல், மகோதய நாள்.இதை முன்னிட்டு, அன்று காலை, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராக பெருமாள் ஆகியோர், கருட வாகனத்தில், கடற்கரை செல்கின்றனர்.அங்கு, சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, சுவாமி அம்சமான சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடுகிறார்.தொடர்ந்து, கோவிலிலும், உற்சவ வழிபாடு நடக்கிறது. சுவாமி நீராடலின்போது, பக்தர்களும், கடலில் நீராடலாம்.