பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
செஞ்சி: அழிவின் விளிம்பில் உள்ள செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சி நகரில் 25க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. இவற்றில் தற்போது கோட்டைக்குள் இருக்கும் சர்க்கரைக் குளம், செட்டிக் குளம், யானைக் குளம், வெங்கட்ரமணர் கோவில் குளமும்; நகர பகுதியில் சக்கராபுரம் குளம், சிறுகடம்பூர் நவாப்பு குளம், பீரங்கிமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் மட்டுமே தண்ணீர் வரும் நிலையில் உள்ளன.
செஞ்சி கோட்டையின் உள்ளே உள்ள சிவன் கோவில் குளம், பீரங்கிமேடு அருணாச்சலேஸ் வரர் கோவில் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் போனது. இதே போன்று செஞ்சி நகரின் நீர் நிலைகளை பாதுகாத்து வந்த பூமியாங்குட்டை, யானைக் குட்டை, பெரியகரம் ராஜா தேசிங்கு பள்ளி எதிரே, காசி விஸ்வநாதர் கோவில் அருகே, அங்காளம்மன் கோவில் பின்புறம், சிங்கவரம் சாலை சிறுகடம்பூர் குட்டைகள் என பல குட்டைகள் 30 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அழிந்து போயின.குளங்களும், குட்டைகளும் அழிந்ததால் செஞ்சி நகரின் நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழே சென்று விட்டது.
தற்போது பீரங்கிமேடு பகுதியில் உள்ள கிணறு, ஏகாம்பரேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் கோவில் குளங்களை பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இப்பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.இதில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளத்தை கடந்த ஆண்டு நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் தூர் வரி ஆழப்படுத்தினர். 300 ஆண்டுகள் வழிபாடு இல்லாமல் இருந்த அருணச்சலேஸ்வரர் கோவிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பெரிய அளவில் உற்சவங்கள் நடந்து வருகின்றன. கோவிலைப் புதுப்பித்த போது போதிய நிதி இல்லாமல் குளத்தை சீரமைக்காமல் விட்டு விட்டனர். மன்னர்கள் காலத்தில் கற்களைக் கொண்டு படிகள் அமைத்து கட்டப்பட்டுள்ள இந்த குளம், புதர்கள் மண்டி கட்டுமானம் உருக்குலைந்து போயுள்ளது.
குளத்தின் மீது ஆக்கிரமித்திருப்பவர்களின் தங்கள் வீட்டு கழிவுகளை குளத்தில் இறக்கி குளத்தை அசுத்தம் செய்து வருகின்றனர்.வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பேரூராட்சி நிர்வாகம் என எந்த துறையும் குளத்தை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தாமல் உள்ளனர்.கேட்பாரின்றி இருப்பதால் நாளுக்கு நாள் குளத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிர மித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் குளம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் நிலை உள்ளது.
முன்னோர்கள் கோவில்களை குளத்துடன் கட்டினர் தற்போது கட்டப்படும் கோவில்களின் அருகே குளங்கள் அமைப்பதில்லை, மாறாக கோவில் கட்டும்போது, தேவைக்காக போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிலைதான் உள்ளது.தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் பெருமையை பாதுகாக்க கோவில் குளங்களை பாதுகாப்பது அவசியம். இந்த அடிப் படையில் பல நாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்கவும், அழிவில் இருந்து பாதுகாக்கவும் இந்து சமய அறநிலையத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.