தென்பாண்டிச் சீமையில் திருக்கானப்பேர் என்னும் காளையார் கோயில் வரகுண பாண்டியரால் உருவாக்கப்பட்டு, மருதுபாண்டியர்களால் வளர்ச்சி பெற்றது. இங்கே பிரசித்தி பெற்ற காளீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு வலதுபுறம் சவுந்தரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலும், இடதுபுறம் மீனாட்சியம்மை சமேத சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இடையில் சொர்ணவல்லி சமேத காளீஸ்வரர்
கோயில் உள்ளது. ஆக இந்த மூன்று திருக்கோயில்கள் உள்ளடக்கிய கட்டுமான அமைப்புக் கொண்டு அற்புதமாக விளங்குகிறது கோயில்!
இங்கே வடக்குத் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் வரகுண பாண்டியர் நிர்மாணித்த நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்தத் திருச்சுற்றை ‘ஆடிவீதி’ என்று அழைக்கிறார்கள். மார்கழித் திருவாதிரைத் திருநாளில் இந்த அழகிய நூற்றுக்கால் மண்டபத்தில் மேற்குறித்த மூன்று திருக்கோயில்களிலிருந்தும் மூன்று நடராஜப் பெருமானின் திருமேனிகளை எழுந்தருளச் செய்து விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் செய்து ‘ஆருத்ரா தரிசனம்’ எனும் ஆதிரை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த அற்புத விழாவில் ஒரே இடத்தில் மூன்று நடராஜப் பெருமான்கள் பங்கு கொள்ளும் அற்புதக் காட்சியைக் காணக் கண் ஆயிரம் வேண்டும்.