பதிவு செய்த நாள்
07
பிப்
2019
10:02
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசத்தில், காவிரி ஆற்று நீர் வைத்து பூஜை செய்யப்படுவதால், மழை பொழியுமா அல்லது கடும் வறட்சி வருமா என, பக்தர்களிடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவர், பக்தர் ஒருவர் கனவில் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார். பக்தர் கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே, அந்த பொருள் கண்ணாடி பேழையில் வைத்து பூஜை செய்யப்படும்.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைத்து பூஜை செய்யப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த அக்., 26 முதல், மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனூர் பாஸ்கர், 35, என்பவரின் கனவில் தீர்த்த கலசத்துடன் காவிரியாற்று நீர் வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது குறித்து, கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம் வைக்கப்பட்டுள்ளது, காவிரி நீர் கொண்டு வந்து வைக்கப்பட்டதால், தற்போது வறட்சி நிலவி வரும் தருணத்தில், வரும் நாட்களில், கடும் மழை பொழியும் அல்லது கடும் வறட்சி நிலவும் என்பதன் குறியீடாக உள்ளது. இதன் தாக்கம் போக போகத்தான் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.