பதிவு செய்த நாள்
07
பிப்
2019
10:02
புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை களைய வேண்டும்; நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பை ஏற்று செயல்படுவோம் என தெரிவித்தார். முந்தைய நிலைப்பாட்டுக்கு மாறாக, தேவஸ்வம் போர்டு, நேற்று, பல்டி அடித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்கலாம் என, தீர்ப்பளித்தது. இதையடுத்து, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற இளம் பெண்களை, ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் தடுத்து, திருப்பி அனுப்பினர். இருப்பினும், பிந்து, 44, கனகதுர்கா, 43, ஆகிய இரு பெண்கள், கேரள அரசு, போலீஸ் உதவியுடன் கோவிலுக்குள் சென்று, தரிசனம் செய்தனர். இதற்கிடையே, அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 65 மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என, நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை என, வாதிட்டார். சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர், ராகஷே் திவிவேதி கூறியதாவது: அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று செயல்படுவோம்.
இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு உள்ளிட்ட காரணங்களை கூறி, மனித சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக பாகுபாடு பார்க்கக் கூடாது. அரசியல் சட்டம், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்தொடர, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. அரசியல் சாசனத்தின் முக்கிய சாராம்சம், சமத்துவமே. இவ்வாறு அவர் கூறினார். இரு தரப்பு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பை, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது என திட்ட வட்டமாக கூறி வந்த, தேவஸ்வம் போர்டு, நேற்று, தன் நிலையை முற்றிலும் மாற்றி, பல்டி அடித்தது, பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வேஷம் கலைந்தது: தேவஸ்வம் போர்டின் நிலை பற்றி, பந்தளம் அரண்மனை நிர்வாகக்குழு தலைவர் சசிகுமார் வர்மா கூறியதாவது: மறுசீராய்வு மனு விசாரணையில், பல உண்மைகள் வெளிவந்துள்ளன. கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என, தேவஸ்வம்போர்டு வக்கீல், தங்கள் நிலையை தெளிவு படுத்தியுள்ளார். இதன் மூலம், தேவஸ்வம் போர்டின் வேஷம் கலைந்து உள்ளது. தீர்ப்பு தள்ளி போவதால், பிப்.,12ல் நடை திறக்கும்போது, சபரிமலை மீண்டும் கலவரபூமியாக மாறுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, பந்தளம் திருவாபரண மாளிகை அருகில் பிரார்த்தனை நடந்தது. கேரள மாநிலம், பத்தணம்திட்டா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம், பந்தளம். இங்குள்ள அரண்மனையில், மன்னர் குடும்பத்தில், கடவுள் அய்யப்பன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதனால், சபரிமலை கோவிலின் பாதுகாவலர்களாக, பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கருதப்படுகின்றனர்.