பதிவு செய்த நாள்
28
பிப்
2012
10:02
மதுரை:மதுரை "ஸ்ரீ வாரி சேவை சார்பில், திருப்பதி திருமலை பக்தர்களுக்கு, சேவை செய்ய விருப்பமுள்ள கல்லூரி மாணவர்கள் முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வைகுண்டம் காம்ப்ளக்ஸில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவுகளை வினியோகிப்பது, காவல் துறைக்கு உதவுவது, பூக்களை பறிப்பது, மாலை தொடுப்பது, லட்டு தயாரிப்பதில் உதவுவது, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற, விருப்பமான சேவையை தேர்ந்தெடுத்து செய்யலாம். மார்ச் மூன்றாம் வாரத்தில், ஒருவார சேவைக்காக, மதுரையில்இருந்து திருமலைக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஐது மணிநேரம் சேவை செய்ய வேண்டும். கடைசிநாளில், சுவாமி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். சேவை நாட்களில் உணவு, தங்குமிடம் இலவசம். மேலும் தகவல்களுக்கு, குழுத் தலைவர் கிரிதரனை, 94433 94308ல் தொடர்பு கொள்ளலாம்.
விதிமீறிய கடைகளை மூட உத்தரவு: திருமலையில், விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளில், திடீர் சோதனை மேற்கொண்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், சில கடைகளை மூடும்படி உத்தரவிட்டனர்.திருமலை கோவிலுக்கு எதிரே ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள கடைகளில், கடந்த வாரம் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள, மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ஏராளமான சுவாமி படங்கள் எரிந்து சாம்பலாயின.இதையடுத்து, திருமலையில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், கடைக்காரர்களிடையே தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருமலையில் தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தலைமையில், தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.அப்போது வணிக வளாகம் அமைந்துள்ள பகுதிகளில், அதிகாரி சீனிவாசராஜு திடீர் சோதனை நடத்தினார். இச்சோதனையில், கடைகளில் இருந்த தீயணைப்பு கருவிகளை அவர் ஆய்வு செய்தார். சில கடைகளில் தீயணைப்பு கருவி காலாவதியாகி இருந்ததை கண்டு, அந்த தீயணைப்பு சிலிண்டர்களை பறிமுதல் செய்தார்.சிலிண்டர்கள் வைக்கப்படாத கடைகளை உடனடியாக மூடும்படியும் உத்தரவிட்டார். விதிமுறைப்படி தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட பின்னரே, கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தேவஸ்தான அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.